Wednesday, November 3, 2010

தீபத் திருவிழா!

தீபத் திருநாளாம் தீபாவளி பற்றி நான் அறிந்த, புரிந்த, மக்களிடம் பார்த்த நிகழ்வுகளின் தகவல்களை இந்த பதிவில் நண்பர்களிடம் பகிர விரும்புகிறேன்.


தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது?

தீபாவளி கொண்டாடப்பட்டுவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் எல்லாம் அடிப்படையில் சொல்வது ஒன்றே, அது "தீபத் திருநாள்". அதர்மம், அநீதி போன்ற இருளை, தர்மம், நீதி போன்ற ஒழியால் வென்றெடுத்த நாள். இன்று நம் உள்ளத்தில், குடும்பத்தில், சமுதாயத்தில் உள்ள இருளை அகற்றி ஒளியை ஏற்ற போகிற நாள். மத, சமூக வேறுபாடின்றி அனைவாராலும் கொண்டாடப்படும் நாள். அதுதான் "தீபாவளி" எனும் தீபத் திருவிழா.


தீபாவளி எப்படி கொண்டாடபடுகிறது?

நான் சிறுவயது முதலே இத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறேன். எங்கள் இல்லத்தை விட எங்கள் பக்கத்து பாட்டியின் இல்லத்தில் நன்றாக இருக்கும்; நான் காலையிலேயே அவர்கள் வீட்டுக்கு சென்று, அனைவரும் இணைந்து கொண்டாடுவோம். அன்றைய நாள் முழுவதும் மிக மகிழ்வுடன் கழியும். அப்பொழுது நான் பெற்ற இந்த விழா அனுபவத்தைதான் இங்கே பகிரப்போகிறேன்.

ஒரு நாளுக்கு முன்னதாகவே திருவிழா ஆரம்பித்து விடும். கிராமத்தில் உள்ளவர்கள் பலரும்நகரம், சிறு நகரம் சென்று முந்தின நாள் இரவில்தான் புத்தாடை வாங்குவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சம்பளப்பணம் அல்லது பண்டிகை முன்பணம் கையில் கிடைக்கும். அப்படியே சமையல் பொருட்கள், வெடி என பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி வருவார்கள். இதனால்தான் நகரங்களில் அதுவும் சந்தை, கடை வீதிகளில் விடிய விடிய பெருங்கூட்டத்தை பார்க்கலாம்.

பெரியவர்கள் ஆடைகள் வாங்கிவந்து வீட்டில் உள்ளவர்களிடம், குறிப்பாக சிறுவர்களிடம் கொடுக்கும்போது அவர்கள் அதை பார்த்து அடையும் மகிழ்ச்சி வருணிக்க இயலாது. அதன் பிறகு வீட்டில் பெண்கள் பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். சிறுவர்கள் வெடி வெடித்து கொண்டிருப்பார்கள். இளைஞர்கள் ஆங்காங்கே கூடி பேசி, விளையாடி, பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை காண்பிப்பார்கள். பெரியவர்களும் குழந்தைகளோடு வீட்டில் வீதியில் மகிழ்ந்திருப்பார்கள். ஊரெங்கும் அந்த பண்டிகை இரவு, ஐப்பசி மாத அமாவாசை இரவு, வெடி மற்றும் சீரியல் பல்ப்புகளின் வெளிச்சத்தில் பகலாய், ஒளி வெள்ளமாய் மாறி இருக்கும்.

மறுநாள், பண்டிகை நாள், அதிகாலையிலேயே பெரியவர்களும் சிறியவர்களும் எழுந்து உடல் முழுவதும் எண்ணைய்ப் பூசி எண்ணெய்க்குளியல்க்கு தயாராகுவார்கள். எண்ணெய்குளியல் முடிந்ததும், புத்தாடைக்கு எல்லோரும் மாறியிருப்பார்கள். இப்போது மிக முக்கிய நிகழ்வு, கடவுள் வணக்கம். ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் வீட்டு பூஜை அறை அல்லது முற்றத்தில் விளக்கு வைத்து குடும்பத்தோடு கடவுளை வணங்குவார்கள். சொற்பமாக சில குடும்பங்கள் கோவிலுக்கு சென்று கடவுளை ஆராதனை செய்வார்கள்.

இதன்பிறகு ஒவ்வொரு வீட்டிர்க்காய் குழந்தைகளை அனுப்பி தங்கள் பலகாரங்களை பகிர்ந்து கொள்வார்கள். பின்னர் குழந்தைகளும், இளைஞர்களும் தங்கள் நண்பர்களிடம் புத்தாடைகளை காண்பித்தும், விளையாடியும், பட்டாசுகளை வெடித்தும், அல்லது நண்பர்கள் பக்கத்து ஊர் என்றால் ஒரு குழுவாக சென்று அவர்களை பார்ப்பதுமாக பண்டிகை களிப்பாய் கழியும். சிலர் குடும்பமாய் உறவினர் வீட்டிற்கு செல்வதும் அல்லது இன்ப சுற்றுலா செல்வதும் உண்டு.

குழந்தைகள் வெளியில் சென்றதும், வீட்டில் பெரியவர்களுக்கு மிகப்பெரிய வேலை வந்து விடுகிறது. அது சமையல். காலையிலும் மதியமும் சிறப்பான ஒரு காய்கறி சமையல் தயாராகும். பெண்கள் மட்டுமல்ல வீட்டிலுள்ள ஆண்களும் இதற்கு உதவுவார்கள். முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் அன்று சைவ சாப்பாடு தான். இன்று சிறிது மாறியுள்ளது. அசைவ சமையல் செய்பவர்களும் உள்ளார்கள். எந்த வீட்டிற்கு சென்றாலும் பண்டிகை நாளில் அருமையான சாப்பாடு உறுதி. அதுவும் மகிழ்ச்சியான ஒன்றுதானே. ஒரு காலத்தில் இதற்காகவே பண்டிகையை பலர் எதிர் நோக்கி இருப்பார்களாம். மதிய உணவு மீண்டும் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பது என இந்த மகிழ்ச்சியும், களிப்பும் இரவு வரை தொடரும்.


தீபத் திருநாள் வாழ்த்துக்கள்:

மொத்தத்தில் வெளியில் மட்டுமல்ல மக்கள் உள்ளங்களிலும் ஒளி நிரம்பியிருக்கும். அன்றைய நாள் மட்டுமல்ல, தொடர்ந்து மக்கள் மனதில் இருள் அகன்று ஒளி பெற வாழ்த்துகிறோம். அனைவருக்கும் தீபத் திருநாளாம் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

7 comments:

  1. சிறுவயது இனிய அனுபவங்கள் ஞாபகம் வருகிறது.
    நன்றி.

    ReplyDelete
  2. இனிய தீபஒளி நல்வாழ்த்துகள் உங்கள் அனைவருக்கும்..!! தலைப்புப்படம் மிக மிக அருமையாக உள்ளது.

    ReplyDelete
  3. திபாவளி கொண்டடியதுபோலே உள்ளது. அனால் ஒன்றுமட்டும் இங்கே குறிப்பிடப்படவில்லை. அன்று வெளியாகும் புது திரைப்படம். அது இன்னொரு திபாவழி அல்லவா இளைங்கர்களுக்கு?. இந்த முறையும் உறவுகளுடன் இந்தியாவில் கொண்டாடமுடியாமல் போயிற்று. :(. அனால் இங்குள்ள உறவுகளுடன் கொண்டடவேண்டியதுதான். இங்கும் நீங்கள் சொன்னது போல் எல்லா பலகார பரிமாற்றங்களும் உண்டு பட்டாசை தவிர.
    இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  4. I feel the title "பஞ்சவர்ண சோலை" and the images blow are not going with.பட்டுப்பவடையும், தாவணியும், வேஷ்டி சட்டையும் இருந்த இன்னும் நல்ல வண்ணமயம இருக்கும். அதைவிட மனசுக்கு நெருக்கமா இருக்கும். சரிதானே???

    ReplyDelete
  5. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தோழர் தோழிகளுக்கும் , மற்றும் வலை உலக நண்பர்களுக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    இந்த தீபாவளி உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் மற்றும் அனைவருக்கும் மிகவும் சந்தோஷத்தையும் ஒற்றுமையையும் கொடுத்து எல்லாம் வல்ல இறைவனின் அருளை பெற எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்........

    வாழ்த்துகளுடன் நண்பன்
    Maharaja.K

    ReplyDelete
  7. அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
    @valarmathi: சரி தான் . தங்கள் மேலான கருத்துக்கு நன்றி .

    ReplyDelete