Monday, December 20, 2010

பொய்யா மெய்யா....இளங்காலை தென்றல் காற்று
நண்பகல் அனல் ஞாயிறு
அந்திநேர பகலடையும் கடற்கரை

முன்னிரவு பவுர்ணமி நிலவு
பின்னரவு அமாவாசை படுக்கையறை
விடியற்காலை வாசமீசும் மல்லி

அத்தனை மாறும் நிலையிலும்
மாறா என்னரகில் நீயோ
இவையனைத்தும் உன் நிலைகள்தானோ

பொய்சொல்ல புலவனல்ல ஞான்
மெய்யுரைய நீதிமானுமல்ல நான்
நின்முன் மெய்மறந்த அடியேன்...

-எஸ் வி

Wednesday, December 8, 2010

எதிர்பாரா அழைப்புநாம் பிரிந்த பல நாட்களுக்கு பிறகு 
வான்திரையில் முகிலெழுதுக்களால் 
நீ எழுதிய என் பெயர் 
கவனிக்காத சிறு பொழுதில் 
சுவடின்றி மறைவது போல 
வளியோடு கரைந்து விட்டு 
வலியோடு உறைந்திருந்த 
ஒரு முன்னிரவு பொழுதில் 
கடலடைந்த நீரின் மறுதலையாய்   
நீ என்னை தொடர்பு கொண்ட போதும் 
உனக்கு தேவையானதை 
என்னிடம் கேட்டு 
தெரிந்து கொண்ட போதும் 
நன்றி என கூறி 
தொடர்பை துண்டித்த போதும் 
என் குரலில் ஏற்பட்ட 
சிறு நடுக்கத்தை 
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

Wednesday, November 24, 2010

உருவம் மாற்றும் பிம்பம்


சமீபமாக என்னை தொடர்ந்து வந்த 
ஒரு வெற்று பிம்பத்திற்கு 
உருவமிட விழைந்து 

பல உருவங்கள் புனைகையில் 
இடும் உருவத்தை எல்லாம் 
விழுங்கிக்கொண்டு வெற்று 
பிம்பமாகவே எட்டிப்பார்த்தது 

உறங்கும் போதும் மற்ற நேரத்திலும் 
பதுங்கி தனிமையில் சிக்குண்டால் 
என்னை விழுங்க முயல்கிறது 
என் கற்பனையை உண்டு வளர்ந்த 
அது நாளடைவில் என் உருவை 
மாற்ற முயல்கிறது 

இதனால் பெரும்பாலும் தனிமையை 
தவிர்த்து வந்த நான் 
தனித்திருக்க நேருகையில் அதன் 
செயப்படுபொருளாய் ஆகிறேன் 

விரைவில் என் உருவம் 
மாறிவிடும் அபாயம் உள்ளதால் 
இக்குறிப்புகளை அவசரமாய் 
இங்கு பதிகிறேன் .

Friday, November 19, 2010

அம்மா


என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .

என் முதல்
தோழியும் கூட . . .

என் செல்ல
குறும்புகளை
செல்லமாய்
திட்டியபடி
ரசிப்பவள் . . .

இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .

Wednesday, November 17, 2010

சிதறல்கள்

* "எதிர்பாரா நிகழ்வுகளின் தொகுப்பு" 
   எனும் என் புத்தகத்தின் 
   முகப்பு உன் வருகை.*  நீர்க்குமிழிக்குள் அடைபட்டிருக்கும்  
   காற்று என் காதல் 
   உன் தீண்டலுக்காய் 
   காத்திருக்கிறேன் .

*  உன்னால் என் இரு 
   கண்களுக்கும் சண்டை 
   உன் முகத்தில் யார் 
   முதல் விழிப்பது என்று.

Tuesday, November 16, 2010

நலம் காப்போம்!!

அனைவருக்கும் வணக்கம்,

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? நம்முடைய தமிழ்க்கலாச்சாரத்தோட முதல் பார்வை விசாரிப்பு இப்படித்தான் இருக்கும். முதல்ல நாம எல்லாரும் விரும்பரது நம்முடைய சுற்றத்தாரும் நட்புகளும் நலமோட இருக்கனும்னு தான். பல பேர் முகம் மலர நல்லாயிருக்கேன் எனக்கென்ன குறை சந்தோசமான குடும்பம், பிள்ளைகள், தொல்லைகள் இல்லாத வேலை என மகிழ்ச்சியான பதிலைக்கூறும் போது நமக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


நம்முடைய நெருங்கிய சிலபேரிடம் கேட்கும் போது “ம்ம் எதோ இருக்கேன்” என்று எதோ ஒரு வித சோகத்தோடு கூறுவார்கள். இப்படி பேசுபவர்களிடம் அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டு அந்த பிரச்சனை, கவலைக்குரிய விடயத்தை நாம் அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். கவலைகளை வளரவிட்டால் அதுவே சிறிது சிறிதாக நம்மை கொல்ல ஆரம்பித்துவிடும். கவலைகள், பிரச்சனைகளின் தொடக்கத்திலேயே நமது நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து அதனை முளையிலையே கிள்ளி எறிந்துவிடவேண்டும்.

அடுத்து சில நண்பர்கள் திடீரென ஆபத்துகள், விபத்துகளில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் நிலையில் இருப்பார்கள். அவர்களை பார்க்கும் போது நமக்கு மிகவும் கவலையாகவும் பதட்டமாகவும் இருக்கும். நமது சொந்தங்கள் நட்புகள் சில நேரங்களில் அவசர உதவிகளை கோரும்போது நாம் மிகவும் பதட்டமாகித்தான் விடுகிறோம். அத்தகைய நேரங்களில் முக்கிய ஆம்புலன்ஸ், மருத்துவமனை, ரத்தவங்கி எண்களை சேமித்து வைத்துக்கொள்ளவும். அவசரமான உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் உதவிகளை தேடிக்கொண்டிருப்பது நேரம் விரயம் ஆவது மட்டுமே.

நண்பர்களே அனைவரும் நலமாக வாழ வேண்டுமென்பதே நமது எண்ணம். எல்லாருக்கும் உதவி செய்யுங்கள், மற்றவர்களையும் உதவி செய்ய அறிவுறுத்துங்கள்!!

Thursday, November 11, 2010

கவிதையாவேன்..இருளில்
நட்சத்திரங்களின் ஒளியில்
கருநீலமென ஒளிரும்
மலையின் நிசப்தங்கள்
பேசுகின்ற வார்த்தைகள்..
நிலவின்
நீள் குளிர்ச்சியில்
ஒளி பெய்து போகும்
சப்தங்கள்..
குழாயிலிருந்து வீழும் நீர்
கை விழுகையில் பேசுவதையும்
உள்ளங்கை வழி வீழ்கையில்
குரல் தொனி மாற்றிக்
கொஞ்சிடும் கொஞ்சல்கள்..
எரியும் சுடர்
தொடாத வரை சுட்டு விடாத
வெப்பத்தின் இருப்பு
உச்சரிக்கும் மந்திரங்கள்..
அர்த்தமாகிவிடும் பொழுதில்
புரிதலுக்குட்பட்ட
அழகிய கவிதையாவேன்..