Wednesday, November 24, 2010

உருவம் மாற்றும் பிம்பம்


சமீபமாக என்னை தொடர்ந்து வந்த 
ஒரு வெற்று பிம்பத்திற்கு 
உருவமிட விழைந்து 

பல உருவங்கள் புனைகையில் 
இடும் உருவத்தை எல்லாம் 
விழுங்கிக்கொண்டு வெற்று 
பிம்பமாகவே எட்டிப்பார்த்தது 

உறங்கும் போதும் மற்ற நேரத்திலும் 
பதுங்கி தனிமையில் சிக்குண்டால் 
என்னை விழுங்க முயல்கிறது 
என் கற்பனையை உண்டு வளர்ந்த 
அது நாளடைவில் என் உருவை 
மாற்ற முயல்கிறது 

இதனால் பெரும்பாலும் தனிமையை 
தவிர்த்து வந்த நான் 
தனித்திருக்க நேருகையில் அதன் 
செயப்படுபொருளாய் ஆகிறேன் 

விரைவில் என் உருவம் 
மாறிவிடும் அபாயம் உள்ளதால் 
இக்குறிப்புகளை அவசரமாய் 
இங்கு பதிகிறேன் .

Friday, November 19, 2010

அம்மா


என்னை இந்த உலகுக்கு
அறிமுகபடுத்தியவள் . . .

என் முதல்
தோழியும் கூட . . .

என் செல்ல
குறும்புகளை
செல்லமாய்
திட்டியபடி
ரசிப்பவள் . . .

இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .

Wednesday, November 17, 2010

சிதறல்கள்

* "எதிர்பாரா நிகழ்வுகளின் தொகுப்பு" 
   எனும் என் புத்தகத்தின் 
   முகப்பு உன் வருகை.*  நீர்க்குமிழிக்குள் அடைபட்டிருக்கும்  
   காற்று என் காதல் 
   உன் தீண்டலுக்காய் 
   காத்திருக்கிறேன் .

*  உன்னால் என் இரு 
   கண்களுக்கும் சண்டை 
   உன் முகத்தில் யார் 
   முதல் விழிப்பது என்று.

Tuesday, November 16, 2010

நலம் காப்போம்!!

அனைவருக்கும் வணக்கம்,

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? நம்முடைய தமிழ்க்கலாச்சாரத்தோட முதல் பார்வை விசாரிப்பு இப்படித்தான் இருக்கும். முதல்ல நாம எல்லாரும் விரும்பரது நம்முடைய சுற்றத்தாரும் நட்புகளும் நலமோட இருக்கனும்னு தான். பல பேர் முகம் மலர நல்லாயிருக்கேன் எனக்கென்ன குறை சந்தோசமான குடும்பம், பிள்ளைகள், தொல்லைகள் இல்லாத வேலை என மகிழ்ச்சியான பதிலைக்கூறும் போது நமக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


நம்முடைய நெருங்கிய சிலபேரிடம் கேட்கும் போது “ம்ம் எதோ இருக்கேன்” என்று எதோ ஒரு வித சோகத்தோடு கூறுவார்கள். இப்படி பேசுபவர்களிடம் அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டு அந்த பிரச்சனை, கவலைக்குரிய விடயத்தை நாம் அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். கவலைகளை வளரவிட்டால் அதுவே சிறிது சிறிதாக நம்மை கொல்ல ஆரம்பித்துவிடும். கவலைகள், பிரச்சனைகளின் தொடக்கத்திலேயே நமது நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து அதனை முளையிலையே கிள்ளி எறிந்துவிடவேண்டும்.

அடுத்து சில நண்பர்கள் திடீரென ஆபத்துகள், விபத்துகளில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் நிலையில் இருப்பார்கள். அவர்களை பார்க்கும் போது நமக்கு மிகவும் கவலையாகவும் பதட்டமாகவும் இருக்கும். நமது சொந்தங்கள் நட்புகள் சில நேரங்களில் அவசர உதவிகளை கோரும்போது நாம் மிகவும் பதட்டமாகித்தான் விடுகிறோம். அத்தகைய நேரங்களில் முக்கிய ஆம்புலன்ஸ், மருத்துவமனை, ரத்தவங்கி எண்களை சேமித்து வைத்துக்கொள்ளவும். அவசரமான உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் உதவிகளை தேடிக்கொண்டிருப்பது நேரம் விரயம் ஆவது மட்டுமே.

நண்பர்களே அனைவரும் நலமாக வாழ வேண்டுமென்பதே நமது எண்ணம். எல்லாருக்கும் உதவி செய்யுங்கள், மற்றவர்களையும் உதவி செய்ய அறிவுறுத்துங்கள்!!

Thursday, November 11, 2010

கவிதையாவேன்..இருளில்
நட்சத்திரங்களின் ஒளியில்
கருநீலமென ஒளிரும்
மலையின் நிசப்தங்கள்
பேசுகின்ற வார்த்தைகள்..
நிலவின்
நீள் குளிர்ச்சியில்
ஒளி பெய்து போகும்
சப்தங்கள்..
குழாயிலிருந்து வீழும் நீர்
கை விழுகையில் பேசுவதையும்
உள்ளங்கை வழி வீழ்கையில்
குரல் தொனி மாற்றிக்
கொஞ்சிடும் கொஞ்சல்கள்..
எரியும் சுடர்
தொடாத வரை சுட்டு விடாத
வெப்பத்தின் இருப்பு
உச்சரிக்கும் மந்திரங்கள்..
அர்த்தமாகிவிடும் பொழுதில்
புரிதலுக்குட்பட்ட
அழகிய கவிதையாவேன்..

Wednesday, November 10, 2010

வினை ஒடுக்கம்

காலில் விழுந்த ஒரு துளி
என் உணர்வுகளை உயிர்ப்பித்ததோடு 
அல்லாமல் குனிந்த படி அமர்ந்திருந்த 
என் தவத்தையும் கலைத்தது .

யாருமற்ற வெளியில் 
எல்லைக்கல் போல் நிற்பதற்கு 
காரணம் ஏதும் அகப்படாமல் 
சற்றே தெளிந்தவனாய் 
நடக்க முற்படுகையில் 
விழுந்த துளி கண்ணீர்த்துளி 
என தெளிந்ததும் வரையறுக்கபடாத 
ஒரு முறுவலை உதிர்த்தேன் .

எப்படி இங்கு வந்தேன் 
அல்லது வந்ததாய் உணர்ந்தேன் 
என்று சிந்தித்து ஊர்கையில் 
பார்வை விளிம்பில் பட்டது ஆழ்கடல். 

சுற்றும் முற்றும் 
காதல் ஜோடிகளோ சுண்டல் காரனோ 
இல்லாததை வைத்து 
இது பொது கடற்கரை அல்ல 
என முடிவுக்கு வந்தவனாய் 
அலைகள் அருகே 
அமர எண்ணி நடக்கையில் 
நெற்றியில் முட்டியது 
தாழிடப்பட்ட அறைகதவு .

இது என்னுடைய அறையா 
எத்தனை நாள் இங்கு கிடக்கிறோம் 
என சிந்திக்க விருப்பமின்றி 
திரும்பி நடந்தேன்.

"இனிமேலாவது நிம்மதியாய் இரு " 
என்ற அவள் கடைசி வசனம் 
மட்டும் நினைவுக்கு வர , 
எவ்வித சலனமுமின்றி 
நாற்காலியை நோக்கி நகர்கிறேன்.

Tuesday, November 9, 2010

தனிமை!

தனிமையின் நினைவுகளே
பிடித்தமாய் இருக்கின்றன

விட்டத்தை வெறித்து
பார்க்கும்போது
நமக்கானவை அனைத்தும்
அப்படியே இருப்பதாகவும்

மேகங்கள் அசையும்போது
நம்முடையவை விலகி
போகிறதாகவும்

லேசான காற்று சன்னமாய்
என்னை தொடும்போது
இயற்கை என்னை
அசைப்பதாகவுமே
நினைத்துகொள்கிறேன்

கூட்டத்தில் இருந்தாலும்
எனக்கானவைகளையெல்லாம்
எங்கோ தொலைத்ததொரு
தோற்றம்

எங்கே தேடியெடுப்பேன்
என்னிடமிருந்து சென்ற
விளையாட்டுத்தனங்களை
குறும்புகளை
வேடிக்கைகளையும்

புதிதானவற்றையெல்லாம்
வித்தியாசமாக எதிர்கொண்டு
கற்றுகொள்ளும் என் திறமெல்லாம்
எங்கே சென்றது

நான்கு சுவற்றுக்குள்
என் முன் அடுக்கிவைத்திருக்கும்
பைல்களில் எங்கேயாவது
ஒளித்து வைத்துவிட்டேனா

கனநொடியில் வேலைமுடிக்கும்
கணினிக்குள் உலவும்
போல்டர்களில் லாக்
செய்து மறைத்துவிட்டேனா

நொடிக்கொரு பொழுதுகளில்
ஓலமிடும் மேனேஜரின்
கட்டளைகளின் நடுவே
என்னை நான் மறந்தே
போய்விட்டேன் போலும்

கண்டெடுக்க வேண்டும்
என் சுயத்தை.......

மூன்றடிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்
கண்ணாடிக்கதவினை
இரண்டு இன்ச்சுகள் திறந்து
வைத்தால் வந்துவிடும்
என் சிட்டுக்குருவி
எத்தனை உலக அதிசயங்களை
கண்டாலும் சிட்டுக்குருவி
கண்டெடுத்து கொடுக்கும் என்னை
அதன் குரலிலும் உருவிலும்.......

Sunday, November 7, 2010

என் உயிரே...
மயக்கத்திலாழ்ந்து....
மதி இழந்து
வாழ்வை இழந்து
இழந்து போன
வாழ்வை எண்ணி வருந்தி
நிம்மதி இன்றி
நித்தமும் மறக்க முடியாமல்
நினைக்க வைக்கும் நினைவே
உனக்கு பெயர் தான்
காதலோ??

ஏதுமில்லை..

என்னிடம் உனக்காக தர
அன்பை தவிர ஒன்றும் இல்லை
என் அன்பையும்
என் காதலையும்
உன் இதயத்தோடு
பத்திரமாய் வைத்துகொள்
என் உயிரே.......

Thursday, November 4, 2010

தீபாவளித் திருநாள் இங்கு இப்படி..


நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

காஷ்மீர் மக்கள் தீபாவளி அன்று "கோ பூஜை" செய்கிறார்கள்...

குஜராத் மக்கள் புதுக் கணக்கு தொடங்கும் நாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்...

தீபாவளி அன்று நாம் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல.. மகாராஷ்டிரா மக்கள் அதிகாலை எழுந்து "உடன்" என்று அழைக்கப் படும் ஒருவகை நறுமண எண்ணையை தேய்த்துக் குளிக்கின்றனர்...

மேற்கு வங்க மக்கள் காளி தேவி வழிபாடாக "மகாநிசா" என்ற பெயரில் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்...

மாவீர் முக்தி அடைந்த நாளாக ஜைனர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்...

அயோத்தி மக்கள் ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிய நாளாக தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்...

உத்தர பிரதேச மக்கள் சீதா தேவியை மீட்டெடுத்த நாளாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்..

வாரணாசி மக்கள் "கார்த்திகை பூர்ணிமா" என்ற பெயரில் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்...

புத்த பிரான் முக்தி அடைந்த நாளாகப் பௌத்தர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்....

கனடா நாடாளுமன்றத்தில் 1998ம் ஆண்டு தீபாவளித் திருநாள் வெகு விமரிகையாகக் கொண்டாடப் பட்டது. வெளிநாட்டு நாடாளுமன்றம் ஒன்றில் தீபாவளி கொண்டாடப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Wednesday, November 3, 2010

தீபத் திருவிழா!

தீபத் திருநாளாம் தீபாவளி பற்றி நான் அறிந்த, புரிந்த, மக்களிடம் பார்த்த நிகழ்வுகளின் தகவல்களை இந்த பதிவில் நண்பர்களிடம் பகிர விரும்புகிறேன்.


தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது?

தீபாவளி கொண்டாடப்பட்டுவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் எல்லாம் அடிப்படையில் சொல்வது ஒன்றே, அது "தீபத் திருநாள்". அதர்மம், அநீதி போன்ற இருளை, தர்மம், நீதி போன்ற ஒழியால் வென்றெடுத்த நாள். இன்று நம் உள்ளத்தில், குடும்பத்தில், சமுதாயத்தில் உள்ள இருளை அகற்றி ஒளியை ஏற்ற போகிற நாள். மத, சமூக வேறுபாடின்றி அனைவாராலும் கொண்டாடப்படும் நாள். அதுதான் "தீபாவளி" எனும் தீபத் திருவிழா.


தீபாவளி எப்படி கொண்டாடபடுகிறது?

நான் சிறுவயது முதலே இத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறேன். எங்கள் இல்லத்தை விட எங்கள் பக்கத்து பாட்டியின் இல்லத்தில் நன்றாக இருக்கும்; நான் காலையிலேயே அவர்கள் வீட்டுக்கு சென்று, அனைவரும் இணைந்து கொண்டாடுவோம். அன்றைய நாள் முழுவதும் மிக மகிழ்வுடன் கழியும். அப்பொழுது நான் பெற்ற இந்த விழா அனுபவத்தைதான் இங்கே பகிரப்போகிறேன்.

ஒரு நாளுக்கு முன்னதாகவே திருவிழா ஆரம்பித்து விடும். கிராமத்தில் உள்ளவர்கள் பலரும்நகரம், சிறு நகரம் சென்று முந்தின நாள் இரவில்தான் புத்தாடை வாங்குவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சம்பளப்பணம் அல்லது பண்டிகை முன்பணம் கையில் கிடைக்கும். அப்படியே சமையல் பொருட்கள், வெடி என பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி வருவார்கள். இதனால்தான் நகரங்களில் அதுவும் சந்தை, கடை வீதிகளில் விடிய விடிய பெருங்கூட்டத்தை பார்க்கலாம்.

பெரியவர்கள் ஆடைகள் வாங்கிவந்து வீட்டில் உள்ளவர்களிடம், குறிப்பாக சிறுவர்களிடம் கொடுக்கும்போது அவர்கள் அதை பார்த்து அடையும் மகிழ்ச்சி வருணிக்க இயலாது. அதன் பிறகு வீட்டில் பெண்கள் பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். சிறுவர்கள் வெடி வெடித்து கொண்டிருப்பார்கள். இளைஞர்கள் ஆங்காங்கே கூடி பேசி, விளையாடி, பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை காண்பிப்பார்கள். பெரியவர்களும் குழந்தைகளோடு வீட்டில் வீதியில் மகிழ்ந்திருப்பார்கள். ஊரெங்கும் அந்த பண்டிகை இரவு, ஐப்பசி மாத அமாவாசை இரவு, வெடி மற்றும் சீரியல் பல்ப்புகளின் வெளிச்சத்தில் பகலாய், ஒளி வெள்ளமாய் மாறி இருக்கும்.

மறுநாள், பண்டிகை நாள், அதிகாலையிலேயே பெரியவர்களும் சிறியவர்களும் எழுந்து உடல் முழுவதும் எண்ணைய்ப் பூசி எண்ணெய்க்குளியல்க்கு தயாராகுவார்கள். எண்ணெய்குளியல் முடிந்ததும், புத்தாடைக்கு எல்லோரும் மாறியிருப்பார்கள். இப்போது மிக முக்கிய நிகழ்வு, கடவுள் வணக்கம். ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் வீட்டு பூஜை அறை அல்லது முற்றத்தில் விளக்கு வைத்து குடும்பத்தோடு கடவுளை வணங்குவார்கள். சொற்பமாக சில குடும்பங்கள் கோவிலுக்கு சென்று கடவுளை ஆராதனை செய்வார்கள்.

இதன்பிறகு ஒவ்வொரு வீட்டிர்க்காய் குழந்தைகளை அனுப்பி தங்கள் பலகாரங்களை பகிர்ந்து கொள்வார்கள். பின்னர் குழந்தைகளும், இளைஞர்களும் தங்கள் நண்பர்களிடம் புத்தாடைகளை காண்பித்தும், விளையாடியும், பட்டாசுகளை வெடித்தும், அல்லது நண்பர்கள் பக்கத்து ஊர் என்றால் ஒரு குழுவாக சென்று அவர்களை பார்ப்பதுமாக பண்டிகை களிப்பாய் கழியும். சிலர் குடும்பமாய் உறவினர் வீட்டிற்கு செல்வதும் அல்லது இன்ப சுற்றுலா செல்வதும் உண்டு.

குழந்தைகள் வெளியில் சென்றதும், வீட்டில் பெரியவர்களுக்கு மிகப்பெரிய வேலை வந்து விடுகிறது. அது சமையல். காலையிலும் மதியமும் சிறப்பான ஒரு காய்கறி சமையல் தயாராகும். பெண்கள் மட்டுமல்ல வீட்டிலுள்ள ஆண்களும் இதற்கு உதவுவார்கள். முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் அன்று சைவ சாப்பாடு தான். இன்று சிறிது மாறியுள்ளது. அசைவ சமையல் செய்பவர்களும் உள்ளார்கள். எந்த வீட்டிற்கு சென்றாலும் பண்டிகை நாளில் அருமையான சாப்பாடு உறுதி. அதுவும் மகிழ்ச்சியான ஒன்றுதானே. ஒரு காலத்தில் இதற்காகவே பண்டிகையை பலர் எதிர் நோக்கி இருப்பார்களாம். மதிய உணவு மீண்டும் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பது என இந்த மகிழ்ச்சியும், களிப்பும் இரவு வரை தொடரும்.


தீபத் திருநாள் வாழ்த்துக்கள்:

மொத்தத்தில் வெளியில் மட்டுமல்ல மக்கள் உள்ளங்களிலும் ஒளி நிரம்பியிருக்கும். அன்றைய நாள் மட்டுமல்ல, தொடர்ந்து மக்கள் மனதில் இருள் அகன்று ஒளி பெற வாழ்த்துகிறோம். அனைவருக்கும் தீபத் திருநாளாம் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் என் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த இனிய தீபாவளி திருநாளில் புத்தாடை, பட்டாசுகள், இனிப்புகள், சிறப்பு நிகழ்ச்சிகள் சூழ்ந்த சொந்தங்கள் என மிக மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் தீபாவளி.
இந்த தீபாவளித்திருநாளில் இந்துக்கள் அனைவரும் நிறைந்த அமாவாசையில் சாமிக்கு விரதம் இருப்பார்கள். அதில் சில சம்பிரதாயங்களோட நமக்கு பிடித்த பலகாரங்களும் நிறைந்திருக்கும். இன்று நாம் அந்த பலகாரத்தை செய்து கடவுளையும் மற்றும் இனிப்புடன் நம் நண்பர்களையும் மகிழ்ச்சியூட்ட போகிறோம்.

வெல்ல எள் பனியாரம் (அதிரசம்)
இதற்கு தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கிலோ
வெல்லம் - 1 கிலோ
எண்ணெய் - 1 லிட்டர்
எள் - போதுமான அளவுபச்சரிசியை அரைமணிநேரம் ஊறவைத்து பின்பு நிழலில் ஆற வைத்தபிறகு மாவாக்கி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து வெல்லத்தை பொடித்து கொட்டி சிறிது நீர்விட்டு கரைக்கவும். வெல்லம் கரைந்து மிதமாக சூடேற்றி இளம்பாகு வரும் வரை காத்திருக்கவும். வெல்லம் கரைந்து இளம்பாகு பதம் வந்தவுடன் அதில் பச்சரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாகமல் கிளறிக்கொண்டே இருக்கவும். பின்பு அதில் எள்ளை போட்டு கிளறவும். இளம்பாகு, மாவும் நன்றாக பிசைந்து உருண்டையாக வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

பின்னர் கிளறிய மாவை சிறிது சிறிதாக உருண்டைகள் பிடித்து வட்டவடிவில் தட்டி நன்றாக காய்ச்சிய எண்ணெயில பொறித்து எடுத்து
எண்ணெய் ஒற்றி ஆற வைத்து பின் சாமிக்கு படைத்து நண்பர்கள், உறவினர்களுக்கு அளித்து சாப்பிடவும். இதே போல சர்க்கரை பாகு எடுத்தும் செய்யலாம்.

தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாகவும் கொண்டாட அனைவருக்கும் வாழ்த்துகள்!!Tuesday, November 2, 2010

யுவனின் மெலடி மெட்டுக்கள்

இப்போதெல்லாம் அதிகமாக கேட்டு ரசிப்பது யுவனுடைய இசைதான்... இளைய ராஜாவுடைய வாரிசு என்பதை நிரூபிக்கிறார் ... 'பையா' பாடல்கள் எல்லாம் மிக அருமை... லேட்டஸ்ட் ஹிட் 'நான் மகான் அல்ல' படத்திலுள்ள 'இறகை போலே அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே'... 'பையா'விற்கு முன்னாடி 'கோவா'ல இருந்து 'இதுவரை இல்லாத உறவிது' பாடல்... அதுவும் யுவனோட குரலில் வரும் சோகப்பாடல் வெர்சன் உண்மையாகவே அருமையான ஒரு மெலடி மெட்டு... இதே வரிசையில 'வாமணன்' படத்தில இருந்து 'ஒரு தேவதை பார்க்கும் நேரமிது மிக அருகினில் இருந்தும் தூரமிது', என்ன ஒரு மெலடி... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு அது... அதுவும் வட இந்திய பிரபல பாடகர் 'Roop Kumar Rathod' குரல் மிக மிக அருமை. எப்படி சரியாய் அவரை பிடித்து பாட வைத்தார் யுவன், என வியப்பாய் இருந்தது... 'சிவா மனசில சக்தி (SMS)' ல இருந்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்' என்ன ஒரு இதமான இசை...


நடிகர்கள் புதிது என்பதால் அல்லது பிடிக்காத நடிகர்கள் என்பதால் அல்லது பிளாப் ஆனதால் அல்லது இன்னபிற காரணங்களினால் பாக்க முடியாத படங்களின் பாடல்களும் நல்லா இருக்கு; அந்த வரிசையில் 'குங்கும புறாவும் கொஞ்சு புறாவும்', 'பானா', 'யாரடி நீ மோகினி', 'தீராத விளையாட்டு பிள்ளை', 'யோகி', 'சர்வம்'... அட எல்லாமே நல்லா இருக்குப்பா... யுவனின் அசாத்திய திறமையை இது காட்டுகிறது... என்ன, கொஞ்சம் நல்ல படத்திற்கு, நல்ல டீம்முடன் யுவன் தேர்ந்தெடுத்து வேலை செய்தால் நன்றாய் இருக்கும்...


என் மனதில் என்றும் இசைவாடிக் கொண்டிருக்கும் யுவனின் ஒரு (கொஞ்சம் பழைய) பாடலின் வரிகள் இதோ:

"நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதோமில்லை

நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதோமில்லை

என் மனமும், உன் மனமும் பேச வார்த்தைகள் தேவை இல்லை

உள்ளுக்குள்ளே உள்ளுக்குள்ளே ஆயிரம் என்னங்கள் ஓடுதடி

அத்தனையும் அத்தனையும் உந்தன் பார்வை தேடுதடி

எத்தனை நாள் எத்தனை நாள் இப்படினான் வாழ்ந்திருப்பேன்

நீயும் இல்லை என்று சொன்னால், எந்த நிழலில் ஓய்வெடுப்பென்... ஓஓஊ"

['காதல் கொண்டேன்' படத்திலிருந்து]


நண்பர்களுக்கு பிடித்த யுவனுடைய பாடல்களை இங்கே வரிசைப்படுத்தலாமே...